ஊரடங்கு உத்தரவை மீறிய தந்தை மீது மகன் புகார்

புதுடில்லி:


டில்லியில் ஊரடங்கு உத்தரவை மீறும் தந்தை மீது மகன் போலீசில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3044 ஆக உள்ளது. பலி எண்ணிக்கை 84 ஆக அதிகரித்துள்ளது. 229 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். நாட்டில் அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 490, தமிழகத்தில் 411, டில்லியில் 384 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது.


கொரோனா பரவலை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டில்லி வசந்த் கஞ்ச் பகுதியில், ஊரடங்கை மீறி தினமும் தனது தந்தை வீரேந்திர சிங் (59) வெளியே செல்வதாக, அவரது மகன் அபிஷேக்(30) போலீசில் புகார் அளித்துள்ளார். அவர் வீட்டுக்குள்ளேயே இருக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்காக பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.