வாகனம் ஓட்டுவதற்கு உலகிலேயே மோசமான இடம் என பெயரெடுத்த இந்திய நகரம்..!

உலகில் வாகனம் ஓட்டுவதற்கான சிறந்த மற்றும் மோசமான நகரங்களை குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியர்கள் அதிர்ச்சி அடையும் முடிவுகள் வெளியாகியுள்ளன.


வாகனங்கள் ஓட்டுவதில் உங்களுக்கு அலாதியான ஆர்வம் இருந்தால் மஹாராஷ்டிரா மாநிலத் தலைநகரான மும்பைக்கு சென்றுவிட வேண்டாம் என்கிறது மிஸ்டர் ஆட்டோவின் ஆய்வு முடிவுகள்.


ஐரோப்பியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் 'மிஸ்டர் ஆட்டோ' நிறுவனம், வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பில் உலகின் தலைச்சிறந்த நிறுவனமாக விளங்குகிறது.

உலகில் வாகனம் ஓட்டுவதற்கு சிறந்த மற்றும் மோசமான இடங்கள் குறித்து இந்நிறுவனம் சமீபத்தில் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. உலகளவில் மொத்தம் 100 நகரங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதில் கிடைத்த முடிவுகள் இந்தியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளன. ஆம், உலகிலேயே வாகனம் ஓட்டுவதற்கு மோசமான நகரங்களுக்கான பட்டியலில் நாட்டின் நிதித்துறை தலைமையிடமாக கருதப்படும் மும்பை முதலிடத்தை பிடித்துள்ளது.

சாலையில் வாகன பயன்பாடு, டிராஃபிக், வாகனங்களின் சராசரி ஆயுட் காலம், சாலை விதிமீறல், சாலை விபத்துகள் உள்ளிட்ட 15 காரணிகளின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தி முடிக்கப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

பெட்ரோல் டீசல் விலை, கார்களின் ஆயுட் காலம், சாலை அமைப்பு, சாலை வரி, வாகன விபத்துகள், அதனால் ஏற்படும் உயிரிழப்புகள், டிராஃபிக், வாகனங்கள் செல்லும் சராசரி வேகம் போன்ற நடைமுறைகளை கணக்கிட்டு மும்பையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதில், 100 மதிப்பெண்களுக்கு 1 மதிப்பெண் மட்டுமே பெற்று மும்பை நகரம் கடைசி இடத்தை பிடித்துள்ளது. இதன்மூலம் உலகளவில் வாகனம் ஓட்டுவதற்கு மோசமான நகரங்களுக்கான பட்டியலில் மும்பை முதலிடத்தை பிடித்துள்ளது.

இதே காரணிகளை வைத்து கணக்கிட்டத்தில் கொல்கத்தா நகரருக்கு 29.99 புள்ளிகள் கிடைத்துள்ளது. இதன்மூலம் அந்நகருக்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது. இவை தவிர, வேறு எந்த இந்திய நகரங்களும் இந்த பட்டியலில் இடம்பெறவில்லை.

மேலும், இந்த ஆய்வு முடிவில் மிகவும் குறைவான சாலை இடையூறுகள் கொண்ட நகரமாக ஜப்பானின் ஒசாகா முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் ஜப்பான் தலைநகர் டோக்கியோ இடம்பெற்றுள்ளது. அதை தொடர்ந்து சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட நகரங்கள் இடம்பெற்றுள்ளன.

அதேபோல வாகனம் ஓட்ட சிறந்த டாப் 10 நகரங்கள் குறித்து மிஸ்டர் ஆட்டோ நிறுவனம் வெளியிட்டுள்ள முடிவில், கனடா நாட்டின் கல்கரி நகரம் முதலிடத்தை பிடித்துள்ளது. அதை ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய், கனடாவின் ஒட்டாவா, ஸ்விட்சர்லாந்து பெர்ன் நகரங்கள் அடுத்தடுத்த இடத்தில் இடம்பெற்றுள்ளன.

இந்த பட்டியலில் அமெரிக்காவின் எல் பாஸோ நகர் 5வது இடத்தில் உள்ளது. வாகனம் ஓட்ட சிறந்த நகரங்கள் பட்டியலில் பெரும்பாலும் ஐரோப்பியா நாடுகளே இடம்பெற்றுள்ளன. இந்த பட்டியலில் எந்தவொரு ஆசிய நகரம் இடம்பெறவில்லை.

மிஸ்டர் ஆட்டோ நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வு முடிவில் நார்வே நாட்டில் பெட்ரோல் விலை அதிகமாக இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. மின்சார வாகன பயன்பாட்டை மக்களிடையே தக்கவைக்கும் பொருட்டு, இந்த நடவடிக்கையை அந்நாட்டு அரசு மேற்கொண்டுள்ளதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.